அன்று ஒரு ஞாயிறு அதிகாலை 5 .30 மணி அளவில் அந்த வினோதமான சப்தம் என்னை எழுப்பியது., நான் விழித்து அந்த மெல்லிய வெளிச்சத்தில் தேடிய போது சீனிச்சாமி மரணித்து இருந்தான்.
நேற்று மாலையும் அல்லாத இரவும் அல்லாத ஒரு பொழுதில் தாகசாந்தி அடைந்து விட்டு வீடு திரும்பும் வழியில், சிறு பிள்ளைகள் சீனிச்சாமி போன்றோர்களை வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள்., எனக்கும் அதன் மேல் ஆர்வம் ஏற்பட்டு அருகில் கடைக்கு சென்று அவனை வாங்கினேன்.அவனுக்கு பெயர் வைக்கலாம் என்று எண்ணி., சீனிச்சாமி என்று பெயர் வைத்தேன்.
நானும் சீனிச்சாமியும் தெருவில் நடந்து வந்த போது., சிறுவர்களும், பெரியவர்களும், எங்களிருவரையும் விநோதமாக பார்த்தார்கள்.நான் வீட்டுக்குள் நுழைந்த போது என் அம்மா "உனக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலை" என்று திட்டியதை பொருட்படுத்தாமல் நானும் சீனிச்சாமியும் வீட்டில் நுழைந்தோம்.அப்பொழுது இரவு 8 .30 .
நானும் அவனும் விளையாடும் தருணத்தில், என் பால்ய பருவம் மீண்டும் திரும்பியதாக உணர்ந்தேன்.,நான் உணவருந்தும் போது உனக்கு டா கண்ணா என்று பாசமாக கேட்டதை சிறு தலையசைப்பில் மறுத்த போதும் கூட., கோபம் எதுவும் ஏற்படாமல் அதை ரசிக்க தான் தோன்றியது.ஏனெனில் அவன் என் கைக்கு வந்த போது பசித்தவன் போல் இல்லாமல் நல்ல விருந்து உண்டவன் போல் காட்சியளித்தது நினைவுக்கு வந்தது.விளையாடிய களைப்பில் இருவரும் எப்போது உறங்கினோம் என்று தெரியவில்லை.
ஒரு நடுநிசியில் விழித்த போது அவன் என்னருகில் உறங்கி கொண்டிருந்தான். அவனின் தூக்கம் கலையாமல் சோபாவில் உறங்க வைத்து பொழுது மணி ஒன்று.பின்பு நான் உறங்க சென்ற விட்டேன்.என் பிரிவு அவனில் ஏதானும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் போல.,அவன் தானாக மரணிக்க அது கோடை காலமும் அல்ல.நல்ல குளிர் தான்.
அந்த மரணத்தை பார்த்த போது மனித வாழ்க்கை இவ்வளவு தான் என்று சீனிச்சாமியே சொல்வது போல இருந்தது., ஒரு நொடியில் நிகழ்ந்து விட்டது அவன் மரணம். அவனது மரணம் என்னுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாவிடினும் சிறுஅதிர்வை ஏற்படுத்தியது கடலளவு உண்மை.
சரி மரணம் நிகழ்ந்து விட்டது அந்த அதிகாலையில்.அவனின் இறுதி சடங்கை (குப்பை தொட்டியில தான்), குளிப்பதற்கு குளிர் பெரும் தடையாக இருந்ததால்., முகம் கழுவி துக்கம் கொண்டாடி., மீண்டும் தூங்கினேன்..தூக்கத்தில் வந்த கனவில் அழகாய் தலையசைத்து கொண்டிருந்தான்.
பின் குறிப்பு
சீனிச்சாமி நேற்றிரவு நான் வாங்கிய............................................................... "பலூன்".